Ashraff enum ilakkiyam | அஷ்ரஃப் எனும் இலக்கியம்
– ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
இந்நூல் இஸ்லாமிய இலக்கியக் கழக உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
எம்.எச்.எம்.அஷ்ரஃபின் கவிதைகள் குறித்த உசாவல்…
‘தங்கம் போல் மேனி
தளதளத்த கண்ணொளிவு
முத்துப்போல் பல்லு
அவர்ர முகத்தெளிவு
நாங்க காணுறெப்போ
மொட்டத் தலையும்
மொழகு நிறக் கண்மொழியும்
சித்திரம் போல் நெத்தியும்
றகுமான் இந்த சீமயிலே
நாங்க காணுறப் போ
கொத்தமல்லி கோமதகம்
குங்குமப் பூ குங்கிலிங்கம்
சாம்புராணி கற்பூரமே
தலைவர நாங்க எங்க தேடிக் கண்டெடுப்பம்
மாணிக்க ரத்தினமே
மாறாத ஒளித் தங்கமிது
எங்கட கல்பு நிறஞ்ச கனி
உங்கள நாங்க காணுவது எக்காலம்’
இரண்டாயிரமாம் ஆண்டில் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் காலமான போது ஒலுவிலில் உள்ள கிராமத்துப் பெண் செயினம்பு பாடிய ஒப்பாரி இது. அஷ்ரஃப் இந்த மக்கள் மத்தியில் ஓர் இலக்கி யமாக, காவியமாகவே வாழ்ந்து மறைந்தார்.
அவர் ஈழத்து முஸ்லிம் சமூகத்துக்கு மந்திரமானவர். அவர் தோற் றத்தினை, முக அழகை, கண்களை, சிரிப்பினை, அகன்ற நெஞ்சினை, நடையழகை எல்லாம் மொத்தமாக சித்திரமாகவோ இலக்கிய மாகவோதான் இம் மக்கள் பார்த்தனர்.
அந்தத் தோரணையில் அவரைப் பற்றி ‘அஷ்ரஃப் ஓர் இலக்கியம்’ என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றியுள்ளேன். இங்கும் ஜெஸ்மி மூஸா தமிழ் சிறப்புத் துறை மாணவராகவிருந்த போது இறுதித் தேர்வுக்காக அஷ்ரஃபின் கவிதைகளை ஆய்வு செய்தார். சிறு கருவேற்றத்துடன் அவ் ஆய்வே இன்று இஸ்லாமிய இலக்கியக் கழக உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாட்டில் நூலாக வெளியீடு செய்யப்படுகின்றது. எவ்வகையிலும் நமது மாணவர்களின் ஆய்வுகள் வெளிவருவது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்குமுரியதுமாகும்.
அஷ்ரஃப் நம்பிக்கை தருகின்ற ஒரு மனிதன், உதாரணமிக்க ஒரு மாணவன், பற்றுள்ள ஒரு சமயவாதி, நல்ல வாசகன், நல்ல படைப் பாளி இவைகளினூடே அவர் ஒரு நல்ல கவிஞனாகவும் தலைவ னாகவும் பரிணமிக்கிறார். அஷ்ரஃப் அரசியலில் ஜொலித்த காலத்திலேதான் அவருடைய கவிதை நூலான ‘நான் எனும் நீ’ வெளி வந்தது. அது அக்காலத்தில் அறுநூறு பக்கங்களைக் கொண்ட மிகப் பெரும் கவிதைத் தொகுதியாக அமைந்தது.
அஷ்ஃபின் எழுத்துக்கள் பெரும்பாலும் சர்ச்சையையும் தோற்று வித்தன. தத்துவ விசாரம் கொண்டவை, உரைநடைப் பாங்குக்கும் நெருக்கமானவை. கலையழகும் பொருளழகும் பெற்றன. இருப் பினும் பிற்காலக் கவிதைகள் பற்றிய பல கேள்விகளும் உள.
‘என்ன பெயர் சொல்லி அழைப்பினும்
உனக்கென்ன
என்ன பெயர் சொல்லி அழைத்தாலும்
உன்னைத்தானே அழைக்கின்றார் எனும்
உண்மையில் நீயொரு போதுமே
சந்தேகம் கொள்வதில்லை’
இறைவனை எல்லோருக்குமுரிய ஒருவனாகக் காண்கின்ற அவர், அவன் தூதரைப் பற்றியும் அற்புதமான கவிதையினை எழுதியவர். ‘விடாது பொழியும் பெருமானார் எனும் அருள்மாரி’ என்ற இந்த அற்புதமான கவிதை சமய ரீதியாக சவால் விட முடியா தளவு சூட்சுமமாக அமைந்தது. இது ஒரு கவியரங்குக் கவிதை. இக் கவியரங்குக்கு தலைமை வகித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘என்னுயை கவிதைகள் கவிதைகள்தானா? என்று எனக்கு தீர்ப்புச் சொல்லுங்கள்’ என்று கவிக்கோவைக் கேட்கிறார் கவிஞர். இக் கவிதை அடங்கிய தொகுதிக்கு பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதிய அணிந்துரையும் மிகுந்த கவனத்துக்குரியது. அஷ்ரஃபின் கவிதைகளில் அவரது காலத்து இனக்கொந்தளிப்பும் அரசியலும் சேர்ந்திருந்தது. இன சௌஜன்னியத்திற்காகவும் அவர் பல கவிதைகளை எழுதியுள்ளார். இருண்ட பாதை இது, புதிய பாதை, பந்தாட்டம் முதலானவை அவரது தனிக்கட்சி ஆதங்கத்தை வெளிப் படுத்தும் கவிதைகள்.
‘நாங்கள் யார்? எங்கெங்கு வாழுகின்றோம்?
நாங்கள் யார்? எங்களுடைய மொழியென்ன?
நாங்கள் யார்? எங்களுடைய நாடு எது?
நாங்கள் யார்? எங்களுடைய பாதையென்ன?
நாங்கள் யார்? எங்களது இலக்கு என்ன?
நாங்கள் யார் எங்களெதிர் காலமென்ன?’
என்று விரிகிறது அக் கவிதை.
எஸ்.ஜே.வி செல்வநாயகம் குறித்தும், மேத்தா பூத்த விருட்சம் என்பனவும் அவரது அரசியல் கொள்கைகளை பிரஸ்தாபிக்கும் முக்கியமான கவிதைகள்.
இதே போன்று அவரது சிறுவர் பாடல்களும் இசைப்பாடல் களும் தனியாக ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. சிறுகதைகள் கட்டுரைகள் குறித்த முயற்சிகளும் நோக்குதலுக்குரியவை.
இவை எல்லாவற்றையுமே ஜெஸ்மி மூஸா தனது நூலில் ஒப்பீட்டு அடிப்படையிலும் பகுப்பாய்வு அடிப்படையில் பல்வேறு வழி களில் ஆய்வு செய்துள்ளார். ஊடகவியலாளரும் தமிழ்ப் பாட ஆசிரிய ஆலோசகருமான ஜெஸ்மி மூஸா தனது முதுதத்துவமாணி பட்டத்தை பூர்த்தி செய்து, தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டு வருகின்றார்.
மேலும், அவரது நூல்கள் வெளிவர வேண்டும். ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கு பயன்பட வேண்டும் என ஆசிக்கின்றேன். அவருக்கு நமது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் என்றுமுண்டு.
கலாநிதி றமீஸ் அப்துல்லா
இருக்கைப் பேராசிரியர்,
மொழித்துறை,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
—
உள்ளடக்கம்
- கவிஞர் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் வாழ்க்கைப் பின்னணியும் அரசியல், கலை இலக்கியப் பணிகளும்.
- ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபில் அஷ்ரஃப்
- அஷ்ரஃபின் கவிதைகளின் உள்ளடக்க மதிப்பீடு
- அஷ்ரஃபின் சிறுவர் பாடல்களும் இசைப் பாடல்களும்
- உசாத்துணைகள்
- பின்னிணைப்பு
- பின்னிணைப்பு


Reviews
There are no reviews yet.