கண் குளிரும் மணவாழ்வு : விதியா? மதியா? திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணை தொடர்பான குறிப்புகள்
இன்று குடும்பம் என்ற நிறுவனம் பயங்கர அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. விவாகரத்து என்பது இன்று சர்வசாதாரணமான விடயமாக மாறிவருகின்றது. கணிசமானளவு குடும்பங்கள் முறிந்த குடும்பங்களாகக் காணப்படுகின்றன. குடும்ப வன்முறையும் பரவலாக இடம்பெற்று வரும் நிலை அவதானிக்கப்படுகின்றது. மணவாழ்வு எதிர்நோக்கும் பிரச்சினைகளின் பட்டியல் இதை விட நீண்டதாகும்.
இவற்றுக்கெல்லாம் தீர்வு, வினைத்திறனும் விளைதிறனும் கொண்ட வழிகாட்டல்களே. இத்தகைய வழிகாட்டல்கள் திருமணம் முடிக்கவுள்ள இளைஞர், யுவதிகளுக்கும் திருமண பந்தத்தில் இணைந்தோருக்கும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் வழங்கப்படுவதற்குத் தேவையான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகும். இன்று சமைத்தல், வீட்டுத் தோட்டம் செய்தல், மணமகளைத் தயார் செய்தல் போன்ற சிறு சிறு விடயங்கள் எல்லாம் தனிக்கலைகளாகவும் துறைகளாகவும் பார்க்கப்பட்டு பயிற்சி நெறிகளுக்கூடாகப் போதிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறிருக்கும் போது மண வாழ்க்கை என்பது எந்தளவு தூரம் வாழ்க்கைக் கலையாகப் பார்க்கப்பட்டு போதிக்கப்பட்டு வர வேண்டும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
இந்த வகையில் உங்களது கரங்களில் தவழும் கண் குளிரும் மணவாழ்வு : விதியா? மதியா? என்ற, திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணை தொடர்பில் பேசும் இந்நூல் ஓர் காத்திரமான முயற்சியாகும்.
வெறுமனே திருமண பந்தத்தில் இணைய இருப்பவர்களுக்கான வழிகாட்டல்களை மாத்திரமன்றி குழந்தை வளர்ப்பு, சிறார்களின் உரிமைகள், பெற்றோர் – பிள்ளை உறவு முதலான குடும்ப வாழ்க்கையுடன் தொடர்பான மற்றும் ஏனைய பல அம்சங்களையும் இந்நூலிலுள்ள ஆக்கங்கள் பேசுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அஷ்ஷேய்க்.ஏ.சீ.அகார் முஹம்மத்


Reviews
There are no reviews yet.